ரூ.5.75 கோடி மதிப்பில் போரூர் ஏரிக்கரையில் பூங்கா
முகலிவாக்கம், ஆலந்துார் மண்டலம், முகலிவாக்கம் பகுதியில், போரூர் ஏரியின் கரைப்பகுதி அமைந்துள்ளது. அதில், முதியோர், இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை வசதியுடன் பூங்கா அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து நடைபாதை அமைக்க, 5.75கோடி ரூபாய் ஒதுக்கி, அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று பூமிபூஜை போடப்பட்டுள்ளது. இதில் வார்டு கவுன்சிலர் செல்வேந்திரன் மற்றும் நலச்சங்கத்தினர் பங்கேற்றனர்.ஏரி நடைபாதை குறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:முகலிவாக்கத்திற்கு உட்பட்ட போரூர் ஏரிக்கரையில் மாநகராட்சி நிதி 5.75 கோடி ரூபாயில், 3.4 கி.மீ., நீளத்திற்கு 5 அடி அகலத்திற்கு நடைபாதை அமைக்கப்படுகிறது. இருபுறமும் இரும்பு தடுப்பு, மின்விளக்குகள் அமைக்கப்படும்.நடைபாதை இருபுறமும், கார்டன் மற்றும் சிறு பூங்கா அமைக்கப்படுகிறது. ஆங்காங்கே பயணியர் அமர்வதற்கு வசதியாக, இருக்கைகள் அமைகின்றன. அடுத்த ஆறு மாதங்களில் இப்பணி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.