உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட இடத்தில் ரூ.1.11 கோடியில் பூங்கா பணி துவக்கம் 

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்ட இடத்தில் ரூ.1.11 கோடியில் பூங்கா பணி துவக்கம் 

ஆதம்பாக்கம்,ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகரில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தில், 1.11 கோடி ரூபாயில் பூங்கா அமைக்கும் பணி, பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. ஆலந்துார் மண்டலத்தில் உள்ள சாஸ்திரிபவன் அலுவலர்கள், 59 பேர் இணைந்து வீட்டுவசதி மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் உருவாக்கினர். அதன் சார்பில், 1979ல் ஆதம்பாக்கம், திருவள்ளுவர் நகரில், 5.4 ஏக்கர் நிலம் வாங்கினர். அந்த இடத்தை வீட்டுமனைகளாக பிரிக்கும்போது, 43,000 சதுர அடி நிலம் சாலை மற்றும் பூங்காவிற்காக மாநகராட்சியிடம் ஒப்படைக்கப் பட்டது. இந்நிலையில், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் தங்களுக்கு சொந்தம்; பட்டா உள்ளது எனக்கூறி, ஒரு கும்பல் இடத்தை கபளீகரம் செய்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இடம், கடந்தாண்டு மீட்கப்பட்டது. இந்நிலையில், மாநகராட்சி சார்பில், 10,000 சதுர அடி நிலத்தில், 1.11 கோடி ரூபாயில் பூங்கா அமைக்கும் பணி, மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமையில், நேற்று பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: திருவள்ளுவர் நகர் பூங்காவில் உடற்பயிற்சி, யோகா கூடம், சிறார்களுக்கான விளையாட்டு வளாகம், நடைபாதை, விளக்கு வசதி, இருக்கைகள், தோட்டம் என, சகல வசதிகளுடன் பூங்கா அமைக்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதத்தில் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை