சிக்னல் கோளாறு, மின்வடம் துண்டிப்பால் மின்சார ரயில் சேவையில் தொடரும் பாதிப்பு தெற்கு ரயில்வே மெத்தனம் காட்டுவதாக பயணியர் குற்றச்சாட்டு
சென்னை, புறநகர் மின்சார ரயில் சேவையில் சிக்னல் கோளாறு, மின்வடம்
துண்டிப்பது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு,
லட்சக்கணக்கான பயணியர் தினமும் அவதிப்படுகின்றனர். ரயில்களை சீராக இயக்காமல் தெற்கு ரயில்வே மெத்தனம் காட்டுவதாக, பயணியர் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னையில்
இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம்,
கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள்
இயக்கப்படுகின்றன.இவற்றில், தினமும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.இத்தடங்களில்
ரயில் பாதைகள் மற்றும் பணிமனைகளில் பராமரிப்பு பணி நடப்பதாகக்கூறி,
வாரந்தோறும் 50க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை ரத்து
செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல், சிக்னல் கோளாறு, மின்வடம் அறுந்து
விழுவது, சில நேரங்களில் தடம்புரளுவது போன்ற விபத்துகளும் நடக்கின்றன.
இதனால், பணிக்கு வந்து செல்லும் லட்சக்கணக்கானோர், தினமும் அவதியடையும்
நிலை ஏற்படுகிறது. 30 நிமிடங்கள் தாமதம்
பயணியர் கூறியதாவது:சென்னை, புறநகரில் வசிப்போரில் பெரும்பாலானோர் மின்சார ரயில்களை நம்பியே இருக்கின்றனர். ஆனால், சீரான ரயில் சேவை இல்லாததால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, சென்ட்ரல் - ஆவடி, அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை தடத்தில் தினமும் 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதுவே, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுவிட்டால், மணிக்கணக்கில் மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்படுகிறது. ரயில்களை சீராக இயக்காமல் தெற்கு ரயில்வே மெத்தனம் காட்டுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.ரயில் நிலையங்கள் மேம்பாடு, ரயில்களின் வேகம் அதிகரிப்பு, 'ஏசி' ரயில் சேவை துவக்கம் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், சீரான ரயில்களின் இயக்கத்தில் தினமும் குளறுபடி நடந்து கொண்டிருக்கிறது. பராமரிப்பு பணி காரணமாக, மறு அறிவிப்பு வெளியிடாமல் 55க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், கடந்த ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. இந்த ரயில்களின் சேவை மீண்டும் துவங்கவில்லை. எந்த பாதிப்பும் இல்லாத நேரத்திலும், 30 நிமிடங்கள் வரை மின்சார ரயில்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்டம், மெத்தனமாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, சீரான மின்சார ரயில் சேவையை வழங்க வேண்டும். - முருகையன் திருநின்றவூர் ரயில் பயணியர் பொதுநலச் சங்கச் செயலர்ரயில்கள் பாதுகாப்பாக இயக்க, பராமரிப்பு பணி முக்கியம். சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்ற, மாற்று ஏற்பாடுகளை முடிந்த வரை செய்து வருகிறோம். கூடுதல் ரயில்கள் பாதை அமைக்கும்போது தான், மின்சார ரயில்களின் சேவையை பாதிப்பு இல்லாமல் இயக்க முடியும். இதற்கான, பணிகள் தற்போது ஆரம்ப நிலையில் இருக்கிறது. - சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள்
சரக்கு ரயிலில் 'டேங்கர்' மூடி திறந்து கிடந்ததால் அதிர்ச்சி
தண்டையார்பேட்டையில், 25 'டேங்கர்'களில் டீசல் ஏற்றிய சரக்கு ரயில், நேற்று மாலை மைசூருக்கு புறப்பட்டது. ரயில், ஆவடி அருகே வந்தபோது, டேங்கரில் இருந்து அதிக சத்தம் வந்துள்ளது. சுதாரித்த ரயில் ஓட்டுநர், ஆவடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரயில் ஆவடி ரயில் நிலைய ஒன்றாவது நடைமேடையில் நிறுத்தப்பட்டது.முதல் நடைமேடைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, 'டேங்கர்' மீது ஏறி ஊழியர்கள் சோதனை செய்தனர். இதில், ஒன்பதாவது டேங்கரின் மேல் மூடி திறந்து கிடப்பது தெரிந்தது. அதை சரிசெய்தபின், ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணியர் ரயில்கள், மூன்றாவது நடைமேடை வழியாக இயக்கப்பட்டன.கடந்த வாரம், திருவள்ளூரில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயில், தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சரக்கு ரயிலில் மூடி திறந்து கிடந்தது, ரயில்வே வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.