அரசு மருத்துவமனையில் மின்தடை 4 மணி நேரம் தவித்த நோயாளிகள்
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், கட்டுமான பணியின்போது மின் வயர்கள் துண்டிக்கப்பட்டதால், பொது மருத்துவ சிகிச்சை துறையில் மின்தடை ஏற்பட்டு, நோயாளிகள் பல மணி நேரம் பரிதவித்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 1,000க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இங்குள்ள பொது மருத்துவ சிகிச்சை துறை கட்டடத்தில், நேற்று மாலை 5:00 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டது. அக்கட்டடத்தில் சிகிச்சை பெற்று வந்த, 62 பேர் அவதிக்குள்ளாகினர். டார்ச் லைட் வெளிச்சத்தில் தடுமாறினர். இதுகுறித்து, மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட் கூறியதாவது:மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடத்தின் அருகே, தரை தளம், முதல் தளத்துடன், பொது மருத்துவ சிகிச்சை துறை கட்டடம் உள்ளது. அவ்விரு தளங்களிலும், 42 ஆண்களும், 20 பெண்களும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.அந்த கட்டடத்தின் மேல் தளத்தில், பொதுப்பணித்துறை கட்டுமான பணிகளை செய்து வருகிறது. இதற்காக, கட்டடத்தின் அருகே பள்ளம் தோண்டும்போது, மின் வயர்களை கட்டுமான நிறுவனத்தினர் தவறுதலாக துண்டித்துள்ளனர்.மேலும், ஜெனரேட்டர் மற்றும் மாற்று மின் வழித்தட வயர்களையும் சேதப்படுத்தி விட்டனர். இதனால் மின் தடை ஏற்பட்டது. மாற்று வழியிலும் மின்சாரமும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.எனவே, நோயாளிகள் வேறு கட்டடத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டனர். ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளோ, தீவிர பாதிப்புக்குள்ளான நோயாளிகளோ அங்கு இல்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர். மின் இணைப்பு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, நேற்றிரவு 9:00 மணிக்கு மேல் மின் விநியோகம் சீரானது.
மின் வாரியம்
காரணமா?மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு, கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு வளாகம் மற்றும் மெக்நிக்கோலஸ் சாலையில் உள்ள துணைமின் நிலையங்களில் இருந்தும், தடையின்றி மின் வினியோகம் நடக்கிறது. மின்சாரத்தை மருத்துவமனைக்குள் விநியோகிக்கும் பணியை, பொதுப்பணி துறை மேற்கொள்கிறது. மின் தடை ஏற்பட்டதற்கு, மருத்துவ கல்லுாரியில் ஏற்பட்ட கேபிள் பழுதே காரணம்; மின் வாரியம் காரணம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.