ஆற்காடு சாலையில் தேங்கும் கழிவுநீரால் பாதசாரிகள் அவதி
சாலிகிராமம்:சாலிகிராமம் ஆற்காடு சாலையில், மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.போரூர் முதல் கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக, ஆற்காடு சாலை உள்ளது. இச்சாலையில் தற்போது, மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.இதில், வடபழனி -- விருகம்பாக்கம் செல்லும் ஆற்காடு சாலையில், சாலிகிராமம் பரணி ஸ்டூடியோ அருகே, மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடி சாலையோரம் தேங்கியுள்ளது.கடந்த 6 நாட்களுக்கு மேலாக கழிவுநீர் தேங்கி வருவதால், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. அந்த கழிவுநீரில் நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அச்சாலையில் உள்ள நடைபாதையில் மரக்கழிவுகளும் குவிக்கப்பட்டு உள்ளன. எனவே, ஆற்காடு சாலையில் உள்ள மழைநீர் வடிகால் அடைப்பை சீர் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.