உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 965 இடங்களில் மழைநீர் தேக்கத்தால் திண்டாடிய மக்கள்

965 இடங்களில் மழைநீர் தேக்கத்தால் திண்டாடிய மக்கள்

சென்னை: சென்னையில், 965 இடங்களில் மழைநீர் தேங்கியதாகவும், அவை மோட்டார் வாயிலாக அகற்றப்பட்டதாகவும், மாநகராட்சி தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மேடவாக்கம், கண்ணகிநகர், ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் பகுதிகளில், 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இரண்டு நாட்களில், சராசரியாக 2.6 செ.மீ., மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை, 489 இடங்களிலும், 21 முதல் நேற்று வரை, 476 இடங்கள் என, 965 இடங்களில் மழைநீர் தேங்கியது. இங்கு, 851 மோட்டார்கள் வாயிலாக மழைநீர் வெளியேற்றப்பட்டது. வேரோடு சாய்ந்த மரங்கள் தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம், 5வது குறுக்கு தெரு, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.ஏ.புரம், 5வது தெரு ஆகிய மூன்று இடங்களில், நேற்று காலை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.  நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர் மண்டலத்தில், அண்ணா நகர் 4வது பிரதான சாலை, வில்லிவாக்கம் காவல் நிலையம் எதிரில், 102வது வார்டு இரண்டாவது பிரதான சாலை, 108 வது வார்டு சேத்துப்பட்டு, 104வது வார்டு திருமங்கலம் எச்., பிளாக் பகுதிகளில் என, நேற்று மதியம் வரை மொத்தம் ஐந்து மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. அதேபோல, நேற்று முன்தினம் இரவு அசோக் பில்லரில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள், மரங்களை உடனுக்குடன் வெட்டி அப்புறப்படுத்தினர். 3.70 லட்சம் பேர் இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில், 965 இடங்களில் மழைநீர் தேங்கினாலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தங்க வைப்பதற்காக, 210 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் வெளியேற்றும் பணியில், 19,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை தாழ்வான பகுதிகளில் வசித்த 1.47 லட்சம் பேர், மதியம் 2.23 லட்சம் பேர் என, 3.70 லட்சம் பேருக்கு, மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். துணை முதல்வரிடம் பொதுமக்கள் புகார் மழை பாதிப்பு குறித்து, மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளிலும், உதயநிதி பேசினார். குறிப்பாக, நுங்கம்பாக்கம் ஜெய்சங்கர் சாலையில் மழைநீர் கழிவுநீருடன் தேங்கியிருப்பதாக, பொதுமக்கள் புகார் அளித்தனர். தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட உதயநிதி, நீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விருகம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணியை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை