| ADDED : ஜன 09, 2024 12:42 AM
பூந்தமல்லி பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டு, தியாகி சொக்கலிங்கம் தெருவில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இந்த சாலையின் சுற்றுவட்டார பகுதியில் தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் சிறு குறு வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும், அகரமேல், மேப்பூர், ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் தியாகி சொக்கலிங்கம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால், 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர். மண் சாலையும் குண்டும் குழியுமாக மாறி படுமோசமாக காட்சி அளிப்பதால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.குறிப்பாக மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பாய்வதால், நிலைமை மேலும் மோசமாகிறது. இது குறித்து பகுதிவாசிகள் ஊராட்சி நிர்வாகத்தில் புகார்கள் பல அளித்தும், எந்த நடவடிக்கை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.