சாலையோர வியாபாரத்திற்கு 3 மீ., அகல சாலையில் அனுமதி மறுப்பு
சென்னை, சென்னையில், 3 மீட்டர் அகலம் கொண்ட சாலைகளில், தெருவோர வியாபாரத்திற்கு அனுமதி வழங்கப்படாது என, மாநகராட்சி வழிகாட்டுதல் வெளியிட்டு உள்ளது.சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தலைவராக கொண்டு, நகர விற்பனை குழு செயல்பட்டு வருகிறது. இக்குழு, சென்னையில் தெருவோர வியாபாரம் செய்யக்கூடிய இடங்கள், செய்யக்கூடாத இடங்களை கண்டறிந்து அனுமதி அளித்து வருகின்றனர்.தற்போது வரை, 150 சாலைகளில், தெருவோர வியாபாரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 188 சாலைகளில் தெருவோர வியாபாரம் செய்யக்கூடாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தெருவோர வியாபாரத்திற்கு அனுமதி அளிப்பது குறித்தான வழிகாட்டுதலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:வார்டு மக்கள் தொகை அடிப்படையில், 2.50 சதவீதம் தெருவோர வியாபாரத்திற்கு அனுமதி வழங்கப்படும். சாலை, தெரு குறுகலாக இருப்பதால், வாகன போக்குவரத்துக்கு, பாதசாரிகள் நடமாட்டத்திற்கு இடையூறாக இருக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் போன்றவற்றில், அனுமதி வழங்கப்படாது.தனியாருக்கு சொந்தமான இடங்களில் அனுமதிக்கப்படாது. சொத்து உரிமையாளரின் ஒப்புதலுடன் அனுமதிக்கலாம். வியாபாரத்திற்கு போலீசார் தடை விதிக்கும் பகுதிகளில் அனுமதி வழங்கப்படாது.இருவழி போக்குவரத்து கொண்ட, 3 மீட்டர் வரை உள்ள சிறிய அகலம் கொண்ட சாலைகளில் அனுமதிக்கப்படாது. ஆனால், வாகனங்கள் அனுமதிக்கப்படாத சாலையாக அறிவிக்கப்பட்டால், வியாபாரத்திற்கு அனுமதிக்கப்படும்.மேலும், 3 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை சிறிய அகலம் கொண்ட சாலைகளில், சாலையோர வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படாது. அவை, ஒருவழி பாதையாக இருந்தால் அனுமதிக்கப்படும். 5 மீட்டர் சாலையாக இருந்தால், ஒருபுறமாக அனுமதிக்கப்படும். 10 மீட்டர் மற்றும் அதற்கு அதிகமாக அகலம் கொண்ட சாலைகளில், இருபுறமும் தெருவோர வியாபாரத்திற்கு அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.