பெரும்பாக்கம் அரசு கல்லுாரி மாணவி 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
சென்னை,பெரும்பாக்கம் அரசு கல்லுாரி மாணவி தாரணி, இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி, 'ஸ்டார் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தார்.இ.சி.ஆர்., கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் தாரணி. பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரியில், பி.காம்., வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு, படிப்புடன் சிலம்பம், இறகு பந்து, கொக்கோ விளையாட்டில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, சிலம்பத்தில் தனி முத்திரை பதித்து வருகிறார். இம்மாதம் சென்னையில் நடந்த உலக சாதனை போட்டியில், தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றினார். இச்சாதனைக்காக, 'ஸ்டார் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்'டில் இடம் பிடித்து, கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவியை, கல்லுாரி முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள், மாணவ - மாணவியர் பாராட்டினர்.கடந்த 2022ல், டில்லியில் தேசிய அளவில் நடந்த போட்டியில், சிலம்பத்தில் சுருள் பிரிவில் முதல் பரிசும், தொடுமுறை பிரிவில், இரண்டாம் பரிசும் தாரணி பெற்றார். கடந்த ஆண்டு, திருப்பூரில் மாநில அளவில் நடந்த போட்டியில், மான்கொம்பு மற்றும் தொடுமுறை சண்டை பிரிவில் முதல் பரிசு; கோவாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், டபுள் ஸ்டிக் பிரிவில் முதல் பரிசு, மான்கொம்பு பிரிவில் இரண்டாம் பரிசு, தொடுமுறை பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றார்.