உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காளி ஏரியை கையகப்படுத்துவதை  எதிர்த்த மனு வாபஸ்

காளி ஏரியை கையகப்படுத்துவதை  எதிர்த்த மனு வாபஸ்

சென்னை ;பரந்துார் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காளி ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்ப பெற அனுமதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், காளி ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க தலைவர் பி.கமலக்கண்ணன் தாக்கல் செய்த மனு: பரந்துார் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், 5,747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இவற்றில், 26.54 சதவீதம் நீர்நிலைகளும் அடங்கும். குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் மக்கள் தங்கள் பாசன வசதிக்காக நம்பியிருக்கும் காளி ஏரியும் கையகப்படுத்தப்படும் சூழல் உள்ளது. இது, அப்பகுதி மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நியாயமற்ற செயல். ஏகனாபுரம் காளி ஏரியை விவசாயம் சாராத பணிகளுக்காகவோ, வர்த்தக பயன்பாட்டுக்காகவோ வகை மாற்றம் செய்யக்கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதி முகமது சபீக், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. பொது நல வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார். இதையடுத்து, மனுவை திரும்ப பெற்று கொள்வதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, மனுவை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை