உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெரிய தொகுதியான சோழிங்கநல்லுாரை பிரிக்க...திட்டம்!:வாக்காளர்கள் தொடர்ந்து உயர்வதால் ஆய்வு

பெரிய தொகுதியான சோழிங்கநல்லுாரை பிரிக்க...திட்டம்!:வாக்காளர்கள் தொடர்ந்து உயர்வதால் ஆய்வு

தமிழகத்தில் வாக்காளர்கள் அதிகம் உடைய சோழிங்கநல்லுார் தொகுதியில், சில பகுதிகளை பிரித்து, வேளச்சேரி, அடையாறு உட்பட ஐந்து சட்டசபை தொகுதியில் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. அபார வளர்ச்சி அடைந்து வரும் தொகுதியாக உள்ளதால், கட்டமைப்புகள் மேம்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும், இப்பணிகளுக்கான ஆய்வை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில், அதிக வாக்காளர்கள் உடைய சட்டசபை தொகுதியாக, சோழிங்கநல்லுார் உள்ளது. தாம்பரத்தில் இருந்த இந்த தொகுதி, 2011ம் ஆண்டு பிரித்து, தனியாக துவங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின், 20 வார்டுகளை உடைய பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் ஆகிய ஏழு ஊராட்சிகள், இந்த தொகுதியின் கீழ் உள்ளன.இத்தொகுதியில் 2016ம் ஆண்டு, 5.75 லட்சம்; 2019ல் 6.39 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். தற்போது, 6.90 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் தொகையில், 8 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர்.அதிகம் போக்குவரத்து உடைய ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள், இப்பகுதியை கடக்கின்றன. ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. அடுத்த 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 7.10 லட்சம் வாக்காளர்களை தாண்ட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அதிக வாக்காளர்கள் சேரும் தொகுதியாகவும் உள்ளது.அபார வளர்ச்சி அடைந்து வரும் தொகுதியாக இருப்பதால், அதை பிரித்து குறிப்பிட்ட சில பகுதிகளை, அருகில் உள்ள வேளச்சேரி, ஆலந்துார், பல்லாவரம், தாம்பரம் மற்றும் திருப்போரூர் சட்டசபை தொகுதியில் சேர்க்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:சோழிங்கநல்லுார் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளதால், கட்டமைப்பு வசதிகள், நிர்வாக நலன் சார்ந்து, குறிப்பிட்ட வாக்காளர்களை அருகில் உள்ள தொகுதியில் சேர்க்கப்பட உள்ளது. இது, 2029 லோக்சபா தேர்தல் அல்லது 2031ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.எந்தெந்த வார்டுகளை சேர்ப்பது, முழுமையாக சேர்ப்பதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளை சேர்ப்பதா என, வாக்காளர்கள் மற்றும் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சோழிங்கநல்லுார் தொகுதி

மொத்த வாக்காளர்கள் 6,90,958உள்ளாட்சி அமைப்பு ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம் ஓட்டுச்சாடிகள்பெருங்குடி மண்டலம் 1,52,077 1,48,775 32 3,00,884 278சோழிங்கநல்லுார் மண்டலம் 98,636 1,00,524 57 1,99,217 187ஏழு ஊராட்சிகள் 94,471 96,346 40 1,90,857 188

அருகில் உள்ள தொகுதிகளில்வாக்காளர்கள் விவரம்

தொகுதி வாக்காளர்கள் (லட்சம்)வேளச்சேரி 3.16ஆலந்துார் 3.94பல்லாவரம் 4.40தாம்பரம் 4.11திருப்போரூர் 3.12

உத்தேசமாக பிரிக்கப்படும் பகுதிகள்

சோழிங்கநல்லுார் தொகுதியில், பெருங்குடி மண்டலத்தில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். இம்மண்டலத்தில் உள்ள கொட்டிவாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி பகுதிகள், வேளச்சேரி சட்டசபை தொகுதியில் இடம்பெறலாம்.உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதி ஆலந்துார் தொகுதியிலும், மடிப்பாக்கம், நன்மங்கலம் பகுதிகள். பல்லாவரம் தொகுதியிலும் இடம் பெறலாம்.மேடவாக்கம், வேங்கைவாசல் பகுதிகள் தாம்பரம் தொகுதியிலம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் ஆகிய பகுதிகள் திருப்போரூர் சட்டசபை தொகுதியிலும் இணைக்க, அதிகாரிகள் உத்தேசித்துள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ