பழைய மழைநீர் வடிகால்வாயை அகற்றி ரூ.38 கோடியில் புதிதாக அமைக்க திட்டம்
ஆலந்துார், ஆலந்துார் நகராட்சியில் இருந்த ஆதம்பாக்கம், நங்கநல்லுார், பழவந்தாங்கல், வாணுவம்பேட்டையுடன் மீனம்பாக்கம், நந்தம்பாக்கம் பேரூராட்சிகள், மணப்பாக்கம், முகலிவாக்கம் ஊராட்சிகள் ஆகியவை இணைத்து, ஆலந்துார் மண்டலம் உருவாக்கப்பட்டது.ஆலந்துார் நகராட்சியிலேயே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, மற்ற பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால்வாய் இருந்தாலும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மக்கள் குடியிருப்புகளுக்கு ஏற்ற வகையில், சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந்தன.ஆலந்துார் மண்டலம் உருவான பின், குடியிருப்பு பகுதிகள் பல மடங்கு அதிகரித்தன. மக்கள் தொகையும் பல மடங்கு உயர்ந்தது.அதே நேரம், காலநிலை மாற்றம் காரணமாக, பருவமழை காலத்தில் அதிக அளவில் பெய்யும் மழைநீரை வெளியேற்ற, பழைய காலத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் போதிய அளவில் இல்லாததால், குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இப்பிரச்னைக்கு தீர்வாக, பழைய மழைநீர் வடிகால்வாய்களை அகற்றி, மழைநீர் முழுமையாக வெளியேறும் வகையில், புதிய வடிகால் அமைக்க வேண்டும் என, மண்டலம் முழுதும் நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.இது குறித்து மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆலந்துார் மண்டலம் முழுதும் ஆய்வு மேற்கொண்டனர்.ஒவ்வொரு வார்டிலும் உள்ள பழைய கால்வாய்களை அகற்றி, புதிய கால்வாய்களை எந்த அளவில் அமைக்க வேண்டும் என, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதையடுத்து, மண்டலம் முழுதும், 57 பழைய கால்வாய்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றை அகற்றி, சாலை, இடத்திற்கு ஏற்ப புதிய கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, 37.96 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.தெற்கு வட்டார துணை கமிஷனர், பணிகள் பிரிவு துணை கமிஷனர் அனுமதி பெறப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் விரைவில் துவக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.