குடியிருப்பு பகுதி ஆக்கிரமிப்பு போலீசை கூப்பிடும் போலீஸ்
சென்னை, காவலர் குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றுவதுடன், அங்கு நடக்கும் மின் திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சென்னை பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலை, கச்சேரி சாலை மற்றும் மந்தைவெளியில் காவலர் குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 700க்கும் மேற்பட்ட போலீசார், குடும்பத்தாருடன் வசித்து வருகின்றனர்.இந்த குடியிருப்பு பகுதிகளை, வெளி ஆட்கள் ஆக்கிரமித்து கடைகள் நடத்துகின்றனர். கடைகளுக்கு வாடகை வசூலும் நடக்கிறது. அங்கு, மின் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடப்பதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து, ஓய்வு பெற்ற எஸ்.பி., ஒருவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:போலீசார் மலிவு விலையில் பொருட்கள் வாங்க, புதுப்பேட்டை மற்றும் பரங்கிமலையில், காவலர் அங்காடிகள் உள்ளன. காவலர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில், புதிதாக காவலர் அங்காடி கிளைகளை துவக்க வேண்டும். அப்போது தான், வெளி ஆட்கள், காவலர் குடியிருப்புகளை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பதை தடுக்க முடியும்.வெளி ஆட்கள் நடமாட்டம் காரணமாக, காவலர் குடியிருப்புகளில் குற்றங்களும் நடக்கின்றன. இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அவருக்கு, காவலர் அங்காடி அமைப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக பதில் மட்டும் அளிக்கப்பட்டு உள்ளது.போலீசார் கூறியதாவது:காவலர் அங்காடி துவக்க தேவையான இடம், பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்புகளில் உள்ளது. அவற்றை, கார் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். காவலர் குடியிருப்புகளில், ஆவின் பால் கூட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.