மேலும் செய்திகள்
மொபைல் போன் பறிப்பு வாலிபர்கள் இருவர் கைது
13-Nov-2024
தாம்பரம்,மேற்கு தாம்பரம், கடப்பேரியைச் சேர்ந்தவர் சுமதி, 52. திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று, நவ., 1ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு தாம்பரம் வந்து, அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.கடப்பேரி, ஜவஹர் மருத்துவமனை அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சுமதியின் 4 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.இச்சம்பவத்தில், சுமதி காயமடைந்தார். புகாரின்படி, தாம்பரம் போலீஸ் வழக்கு பதிந்து விசாரித்தனர்.தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, திருட்டு நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.ஜி.எஸ்.டி., சாலை, சென்னை புறவழிச்சாலை, குன்றத்துார் - குமணன்சாவடி சாலைகளில் உள்ள 300 கண்காணிப்பு கேமராக்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்தனர்.இதில், சுமதியிடம் செயின் பறித்த திருடர்கள், ஜி.எஸ்.டி., சாலை வழியாக கூடுவாஞ்சேரிக்கு சென்று, அங்கும் இருவரிடம் மொபைல் போன்களை பறித்துள்ளனர்.பின், மீண்டும் தாம்பரத்திற்கு வந்து, மெப்ஸ் சிக்னல் அருகே யு-டர்ன் எடுத்து, தாம்பரம் நோக்கி சென்று, புறவழிச்சாலை வழியாக பூந்தமல்லி சென்றது தெரியவந்தது. அதன்பிறகு கண்காணிப்பு கேமராக்களில் அவர்கள் சிக்கவில்லை.இதற்கிடையே, மர்ம நபர்கள் பற்றிய விபரங்களை, மற்ற காவல் நிலையங்களிலும், போலீசார் சேகரித்தனர்.இதில், வழிப்பறியில் ஈடுபட்டது, அயப்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், 23, விஜயன், 21, என்பது தெரிந்தது.மேலும், சுமதியிடம் நடத்திய வழிப்பறி சம்பவத்திற்கு இரு நாள் கழித்து விபத்து ஒன்றில் விஜயன் சிக்கி, காலில் அடிபட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் தெரிந்தது.இதையடுத்து இருவரையும், நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும், ஏற்கனவே வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன.சிறையில் இருந்த போது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, சிறையில் இருந்து வெளியே வந்ததும், இருசக்கர வாகனத்தில் சென்று, பெண்களிடம் விலாசம் கேட்பது போல் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 4 சவரன் செயின், மூன்று மொபைல் போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை, தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
13-Nov-2024