நள்ளிரவில் பைக் ரேஸ் அடாவடி இளைஞர்களை தேடும் போலீஸ்
சென்னை:சென்னையில், மக்களை பதற வைக்கும் வகையிலும், விபத்துக்களுக்கு வழி வகுக்கும் வகையிலும், இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்கின்றன.போலீசார் தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டாலும், அவர்களின் அட்டகாசம் குறைவதாக இல்லை.நேற்று முன்தினம் நள்ளிரவில், கோயம்பேடு முதல் அடையாறு வரை இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் சென்றுள்ளனர். அப்போது, வாகனங்களை அதிவேகமாகவும், சாய்ந்து சாய்ந்து இயக்கியும் பார்ப்பவர்களை பதற வைத்துள்ளனர். இந்த வீடியோ பதிவுகளை, சமூக வலைதளத்தில் பரப்பி, பெருமை அடித்துள்ளனர்.இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:பைக் ரேஸ் நடத்திய இளைஞர்களின் வாகனங்களில் பதிவு எண் தகடு இல்லை. இருப்பினும், போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஐந்து பேர், அடாவடி இளைஞர்களை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.கோயம்பேடு - அடையாறு வரையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியவர்கள் யாராக இருந்தாலும், வழக்கு பதிந்து, 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஏற்கனவே, பைக் ரேஸ் நடத்தியவர்களை பிடித்து அபராதம் விதித்தது, பெற்றோரை வரவைத்து விசாரிப்பது, 'இதுபோல் இனிமேல் நடக்கமாட்டேன்' என, இளைஞர்களிடம் உறுதி மொழி பத்திரம் எழுதி வாங்குவது என, பலகட்ட முயற்சிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.