உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 10 ஆண்டாக நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பு கிடப்பில் காவல் நிலைய கட்டுமான பணி

10 ஆண்டாக நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பு கிடப்பில் காவல் நிலைய கட்டுமான பணி

துரைப்பாக்கம், துரைப்பாக்கம் காவல் நிலையம், 1990ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த இந்த காவல் நிலை யம், 2003ம் ஆண்டு, சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் இணைக்கப்பட்டது. இந்த காவல் நிலையம், 33 சென்ட் இடத்தில், ஓ.எம்.ஆரில் மிகவும் பழமையான கட்டடத்தில் செயல்படுகிறது. இந்த காவல் நிலையம், சாலை மட்டத்தை விட, 2.5 அடி பள்ளத்தில் உள்ளது. அதனால், ஒவ்வொரு மழைக்கும், வளாகத்தில் வெள்ளம் தேங்கி, மோட்டார் கொண்டு மழைநீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். லேசான மழைக்கே, கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதுடன், சுவரும் ஈரப்பதமாக மாறுகிறது. முக்கிய கைதிகளை, வேறு காவல் நிலையத்தில் வைத்து பாதுகாக்க வேண்டிய சூழல் உள்ளது. போலீசாரும் இடப்பற்றாக்குறையால் திணறுகின்றனர். இதே இடத்தில் புதிய காவல் நிலையம் கட்ட, 10 ஆண்டுகளுக்கு முன் கோப்புகள் தயாரிக்கப்பட்டன. காவல் நிலையம் கட்டுவதற்கான இடம் நீளமாக உள்ளதால், சதுர வடிவில் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. அதனால், வடிவமைப்பில் மாற்றம் செய்து, 4.30 கோடி ரூபாய்க்கு மதிப்பீட்டை உயர்த்தி, காவல் துறை உயர் அதிகாரிகள் வாயிலாக, தமிழக உள்துறை செயலர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், அதற்கான நிதி 10 ஆண்டுகளாக ஒதுக்கப்படாததால், காவல் நிலையம் கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ள ஓ.எம்.ஆரில் இந்த காவல் நிலையம் உள்ளதால், விரைந்து நிதி ஒதுக்கி கட்டுமான பணியை துவக்க வேண்டும் என, போலீசார் மற்றும் துரைப்பாக்கம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை