போலீஸ்காரருக்கு பளார் போதை நபர் கைது
எம்.கே.பி.நகர், சென்னை, எம்.கே.பி.நகர் காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு பிரிவு போலீஸ்காரராக பணிபுரிபவர் வெங்கடேசன், 30. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, எம்.கே.பி.நகர், நார்த் அவென்யு சாலையில், ஜிப்சி வாகனத்தில் ரோந்து சென்றார். அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்தார். அதில் ஆட்டோ டிரைவர் இப்ராஹிம், 34, குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இப்ராஹிமை காவல் நிலையம் அழைத்து செல்ல, ரோந்து வாகனத்தில் ஏற அறிவுறுத்தினார். ஆத்திரமடைந்த இப்ராஹிம், போலீஸ்காரர் வெங்கடசேன் கன்னத்தில் பளார் என அறைந்தார்.இதில், காயமடைந்த வெங்கடேசன், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இப்ராஹிமை கைது செய்தனர்.