மாதவரம், மாதவரம், புழல், அம்பத்துார் சுற்றுவட்டாரங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், ஏராளமான கார்டுதாரர்களுக்கு, பொங்கல் இலவச வேட்டி - சேலை கிடைக்கவில்லை.இதற்கு காரணம், அந்தந்த பகுதி வருவாய்த் துறையினரின் குளறுபடியால், ரேஷன் கடைகளுக்கு இலவச வேட்டி - சேலை குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால், ஒரு சில கடைகளில், ரேஷன் கார்டுகளில் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே, பொங்கல் பரிசு தொகுப்பில் இலவச வேட்டி - சேலை கிடைத்தது.ரேசன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, 'கையிருப்பில் வேட்டி, சேலை இல்லை; வந்தால் கொடுக்கிறோம்' என்றனர். ஆனால், பிப்ரவரி மாதம் முடிந்த பிறகும் விடுபட்டவர்களுக்கு, இலவச வேட்டி - சேலை கிடைக்கவில்லை.இதுகுறித்து, உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. விசாரணையில், வருவாய்த் துறையினரின் குளறுபடியான கணக்கு பதிவே, இந்த பிரச்னைக்கு காரணம் என கூறப்படுகிறது.இந்த பிரச்னையை சமாளிக்க, 'சில கடைகளில் இருப்பில் உள்ள இலவச வேட்டி - சேலைகளை, வாங்காத கார்டுதாரர்களுக்கு கொடுத்து, ஜனவரி மாதமே பெற்றுக்கொண்டதாக பதிவு செய்ய வேண்டும்' என, நேற்று முன்தினம், உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் திடீர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:ரேஷன் கடையில் உள்ள மொத்த கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இலவச வேட்டி - சேலை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, கடையில் உள்ள, 'பாய்ன்ட் ஆப் சேல்' இயந்திரத்தில் பதிவானது. ஆனால், வருவாய்த் துறை மூலம், ரேஷன் கடைகளுக்கு இலவச வேட்டி - சேலைகள், ஜனவரியில் 50 முதல் 60 சதவீதம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டன. இதனால், வாங்காத கார்டுதாரர்கள் அனைவருக்கும், எப்படி வழங்க முடியும் என செய்வதறியாது தவிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.