உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1.77 கோடியில் பணிகள்; பூந்தமல்லி நகராட்சியில் தீர்மானம்

ரூ.1.77 கோடியில் பணிகள்; பூந்தமல்லி நகராட்சியில் தீர்மானம்

பூந்தமல்லி; பூந்தமல்லி நகராட்சி கூட்டத்தில் 1.77 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூந்தமல்லி நகராட்சி கூட்டம், அதன் தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த காஞ்சனா சுதாகர் தலைமையில், நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மொத்தம் 21 கவுன்சிலர்களில் 19 பேர், இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், ஐந்தாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வடிவேலன், ''நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும், குப்பை கழிவுகள் தினமும் முறையாக அகற்றப்படுவதில்லை. குப்பை அகற்ற வாகனங்கள் வழங்குவதில்லை. மேலும், கூட்டத்தில் தீர்மானம் வைத்து, ஆறு மாதங்கள் கடந்தும், பணிகளை செய்ய 'டெண்டர்' விடவில்லை. ஆனால், புதிய தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்படுவது,'' என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, எட்டாவது கவுன்சிலர் சுயேட்சை கவுன்சிலர் கவிதா, ''என் வார்டில் சாலைகள் சரியில்லை. சாலை சீரமைக்கும் பணி நடந்தாலும், என் கவனத்திற்கு வருவதில்லை,'' என்றார். கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான கவுன்சிலர்கள், நகராட்சியில் குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படவில்லை. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றஞ்சாட்டினர். குப்பை கழிவுகளை அகற்றவும், பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப் படும் என, நகராட்சி கமிஷனர் சரவணகுமார் தெரிவித்தார். தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பூந்தமல்லி நகராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்கு அனுமதி அளித்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. வார்டுகளில் சேதமடைந்த தார் சாலைகளை சீரமைக்க, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்க, பயணியர் நிழற்குடை கட்ட, மழைநீர் கால்வாய்களை துார்வார உள்ளிட்ட பணிகளுக்கு, 1.77 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை