பகல், இரவு தொடரும் பவர் கட் பாடி பகுதி மக்கள் அப்செட்
அம்பத்துார், பாடி, குமரன் நகர் பகுதியில் நள்ளிரவு வேளைகளில் தொடரும் மின் தடையால், பகுதிமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அம்பத்துார் மண்டலம், 88வது வார்டுக்கு உட்பட்ட பாடி, குமரன் நகர் விரிவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு வாரமாக நிலவும் சீரற்ற மின் வினியோகத்தால், கர்ப்பிணியர், பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதியடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகா லை 3:00 முதல் 12 மணி நேரத்திற்கும் மேல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் மீண்டும் மின் வெட்டு பிரச்னை ஏற்பட்டது. இரவு 10:00 மணி வரை, நான்கு முறை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் அரை மணி நேரத்திற்கு மேல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்றும் இதே நிலை தொடர்ந்தது. சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள், ஆய்வு செய்து தொடரும் மின் வெட்டு பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில், 'இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பில், பல நாட்களாக பிரச்னை இருக்கிறது. இது குறித்து புகார் அளிக்க முயலும்போது, மின்சார வாரிய அதிகாரிகள், மொபைல்போன் அழைப்புகளை ஏற்பதில்லை. '88வது வார்டு கவுன்சிலர் நாகவல்லியும் தேர்தல் நெருங்குவதால், மக்கள் பணியை விட கட்சி பணியிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்' என குற்றம் சாட்டினர்.