எஸ்.ஐ., வேலை ஆசைகாட்டி ரூ.18 லட்சம் மோசடி: பூசாரி கைது
சென்னை: போலீஸ் எஸ்.ஐ., வேலை ஆசைகாட்டி, 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த, படப்பை சிவன் கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார். அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 34. இவர், தந்தை நடத்தி வரும் கார் மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது கல்லுாரி நண்பர்கள் இருவர், அரசு வேலைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் நாவலுாரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 39, என்பவரிடம் பணம் கொடுத்திருந்தனர். இதை அறிந்த சீனிவாசன், ரஞ்சித்குமாரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, போலீஸ் எஸ்.ஐ., வேலை வாங்கி தருவதாக கூறி, 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை, பல தவணையாக, 18 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார். பின், போலி பணி நியமன ஆணை கொடுத்து மோசடி செய்துள்ளார். ஏமாற்றப்பட்ட சீனிவாசன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகார் குறித்து, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ரஞ்சித்குமார் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பலரிடம், கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், போலி பணி நியமன ஆணைகள், வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமார், படப்பையில் உள்ள சிவன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.