உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கைதிகள் இனி இன்டர்காமில் வக்கீல்களுடன் பேச முடியாது

கைதிகள் இனி இன்டர்காமில் வக்கீல்களுடன் பேச முடியாது

சென்னை, சிறை கைதிகளை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆனந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் ஆஜராகி, ''சிறையில் உள்ள கைதிகளுடன், 'இன்டர்காம்' வாயிலாக மட்டுமே பேச வேண்டும் என்று கூறப்படுவதால், அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறதோ என்ற அச்சம், கைதிகள் மத்தியில் உள்ளது,'' என்றார்.அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, ''இன்டர்காம் உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை. தற்போது, கைதிகள் இன்டர்காம் வாயிலாக வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்ப பெறப்பட்டுள்ளது. மீண்டும் பழைய நடைமுறையே கொண்டு வரப்பட்டுள்ளது,'' என்றார்.அப்போது, வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணகுமார், அ.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி, 'கைதிகளின் உரிமை விஷயத்தில், சிறைத்துறை கவனமுடன் செயல்பட வேண்டும். அவர்கள் விசாரணை கைதிகள் தான்; தண்டிக்கப்படவில்லை. அவர்களுக்கு நிவாரணம் என்பது, வழக்கறிஞர்கள் வாயிலாக தான் கிடைக்கும். எனவே, புதிய நடைமுறைகளை திரும்ப பெற வேண்டும்' என்றனர்.அதற்கு, ஒரே நேரத்தில் ஐந்து கைதிகளை சந்திக்க அனுமதி அளிக்கப்படும்; கைதிகளை சந்திக்க வரும் பெண் வழக்கறிஞர்களுக்கு, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது என, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, 'தற்போது செய்யப்பட்டுள்ள கழிப்பறை வசதியை முறையாக பராமரிக்க வேண்டும். வட மாநிலங்களை விட, தமிழகத்தில் சிறை வசதிகள் சிறப்பாக உள்ளன. வழக்கறிஞர்களும், சிறை அதிகாரிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும்' என்று அறிவுறுத்திய நீதிபதிகள், வரும், 15ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி