குப்பை கிடங்கை அகற்றக்கோரி போராட்டம்
கொடுங்கையூர்:கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வடசென்னையில், 350 ஏக்கரில் கொடுங்கையூர் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் இருந்து தினமும், 2,000 டன் குப்பை கொட்டப்படுகிறது. இது, சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், சுகாதார பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர். 'பயோமைனிங்' முறையில், குப்பையை தரம் பிரித்து உரம், கட்டுமானத்திற்கான கற்கள், மின்சார தயாரிக்கும் முறை செயல்படுத்த, மாநகராட்சி முயற்சித்து வருகிறது. குப்பைக் கிடங்கை அகற்றக்கோரி, எழில் நகர் தொப்பை விநாயகர் கோவில் அருகே, 100க்கும் மேற்பட்டோர் நேற்று, பாடை கட்டி, ஒப்பாரி வைத்து, அப்பகுதி மக்கள் நுாதன போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. **