சாலையில் விபத்து நடந்து நெரிசல் ஏற்பட்டால் மாற்றுவழி அறிவிக்கும் வாகனங்கள் கொள்முதல்
-போக்குவரத்து காவல் துறை சார்பில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 93.50 லட்சம் ரூபாய் செலவில், 17 நவீன வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை போக்குவரத்து காவல் துறையில், சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கக்கூடிய நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 'யு - டர்ன்' வசதி வழங்கப்பட்ட இடங்களில், எல்.இ.டி., விளக்குகள் கொண்ட கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது, 93.50 லட்சம் ரூபாய் செலவில் சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கக்கூடிய, 17 நடமாடும் விழிப்புணர்வு வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் குறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக வாங்கப்பட்டுள்ள நவீன வாகனங்களில், டிஜிட்டல் திரை, ஒலி பெருக்கி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இயற்கை பேரிடர் காலத்திலும், விபத்துகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கும் நிலையிலும், சில சாலைகளில் போக்குவரத்து முடக்கப்படுவது வழக்கம். அத்தகைய சாலை சந்திப்புகளில் இந்த வாகனங்கள் நிறுத்தப்படும். அதில், சாலை மூடப்பட்டதற்கான காரணம், மாற்று வழிகள் குறித்து ஒளித்திரை வாயிலாகவும், ஒலி பெருக்கி வாயிலாகவும் அறிவிக்கப்படும். இதில் உள்ள கண்காணிப்பு கேமரா வாயிலாக, நெரிசல் மிகுந்த சாலைகள் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு அறிவிக்க முடியும். முதற்கட்டமாக, 17 நடமாடும் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகனமும் சூரியஒளி மின் சக்தியில் இயங்ககூடியவை. எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார். நமது நிருபர் -