உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு மருத்துவ கல்லுாரியில் ராகிங் 3ம் ஆண்டு மாணவர் மண்டை உடைப்பு 

அரசு மருத்துவ கல்லுாரியில் ராகிங் 3ம் ஆண்டு மாணவர் மண்டை உடைப்பு 

சென்னை:கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி விடுதியில், மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவரை, சீனியர் மாணவர்கள் பீர் பாட்டிலால் தாக்கி, மண்டையை உடைத்துள்ளனர்.சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் ஆலன் கிரைசோ, 21, மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார். விடுதி கேண்டீனில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், ஆலன் சாப்பிட்டுவிட்டு, தன் அறைக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, மருத்துவ கல்லுாரியில், ஐந்தாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள், அவரை அழைத்து, கிண்டல் செய்ததோடு, சக ஜூனியர் மாணவர்களை அழைத்துவரும்படி தெரிவித்துள்ளனர். இதன்படி, சக மாணவர்களை அழைத்து வருவதற்காக, ஆலன் மெதுவாக சென்றதால், 'சீனியர்கள் ஒரு வேலை சொன்னால் இப்படித்தான் மெதுவாக செல்வாயா' எனக்கேட்டு, மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால், ஆலனில் தலையில் இருவரும் தாக்கினர். இதில், ரத்தம் கசிந்து ஆலன் மயங்கி விழுந்தார்.சக மாணவர்கள் மீட்டு, அதே மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.சம்பவம் குறித்து விசாரிக்க, கீழ்ப்பாக்கம் போலீசார் விடுதிக்கு சென்ற்போது, 'நாங்கள் குழு அமைத்து விசாரித்து கொள்கிறோம். நீங்கள் தலையிட வேண்டாம்' என, மருத்துவ அதிகாரிகள், போலீசாரை திருப்பி அனுப்பினர்.இதுகுறித்து, மருத்துவ மாணவர்கள் கூறியதாவது:தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் ஒருவரின் தந்தை, டி.ஜி.பி., அலுவலகத்தில், போலீஸ் உதவி கமிஷனராக உள்ளார். அவரது அதிகாரத்தால்தான், மாணவர்கள் இதுபோன்று, கல்லுாரி விடுதியில் மது அருந்துதல், ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே மாணவர்கள் மீது, இதற்குமுன் புகார் அளிக்கப்பட்டது. ராகிங் தடுப்பு குழுவும் முறையாக விசாரிக்கவில்லை. தற்போது, பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்துதான், ராகிங் விவகாரம் வெளியே வந்துள்ளது. அவற்றை, நாங்களே பார்த்து கொள்கிறோம் என, அனைத்தையும் மறைக்கும் முயற்சியில், கல்லுாரி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.மருத்துவ கல்லுாரி நிர்வாகம் சார்பில் கூறுகையில், 'ராகிங் தொடர்பாக சில புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.போலீசார் கூறுகையில், 'தாக்குதல் தொடர்பாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர் புகார் அளித்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ