| ADDED : நவ 20, 2025 03:14 AM
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஆர்.டி.ஓ., சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய மூன்று மணி நேர சோதனையில், கணக்கில் வராத 1.50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில், பூந்தமல்லி ஆர்.டி.ஓ., சோதனை சாவடி இயங்கி வருகிறது. சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள், இங்கு அந்தெந்த மாநிலங்களுக்குள் செல்வதற்கான வரியை செலுத்த வேண்டும். மேலும், அந்த வாகனங்களின் ஆவணங்கள் முறையாக உள்ளதா என்பதை சோதனை செய்யும் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை திடீரென சோதனை நடத்தினர். மூன்று மணி நேரம் தொடர்ந்த சோதனையில், கணக்கில் வராத, 1.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.