உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டியெடுத்த மழை 690 மின்கம்பங்கள், பல்லாயிரக்கணக்கான பயிர் நாசம்

செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டியெடுத்த மழை 690 மின்கம்பங்கள், பல்லாயிரக்கணக்கான பயிர் நாசம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு நாட்களாக விடாத பெய்த மழையால், கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் உட்பட பல குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் பாதித்த 378 பகுதிகளில் இருந்து 1,471 பேர் மீட்கப்பட்டு, 41க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் உட்பட எட்டு தாலுகாவில், சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்ததில், 10,000 ஏக்கர் நெற்பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் 417 ஏக்கர் நீரில் மூழ்கியது.தவிர 690 மின்கம்பங்கள், 23 மின்மாற்றிகள் புயலால் உடைந்து விழுந்துள்ளன. அவற்றை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.குறிப்பாக, ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதை ஒட்டியுள்ள ஐந்து கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனி தீவு போல மாறியுள்ளது.சூணாம்பேடு பகுதியில் இருந்து திண்டிவனம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், சூணாம்பேடு ஏரி மற்றும் புதுப்பட்டு ஏரி உபரி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நேற்று காலை அந்த வழியாக சென்ற 'ஈச்சர்' வாகனம் வெள்ளத்தில் சிக்கியது. வெள்ளத்தில் சிக்காமல் இருக்க, வாகனத்தின் பின்புறம் இருந்த இருவர், கீழே இறங்கினர். அப்போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அருகே இருந்து முட்புதரில் சிக்கினர். அப்பகுதியினர் கயிறு கட்டி, இருவரையும் மீட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,067 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது. தவிர, கொட்டவாக்கம், போந்தவாக்கம், சாமந்திபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், படிப்படியாக சீர்செய்யப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில், மழைநீர் வெள்ளம்போல தேங்கியது. 170 குடும்பங்களைச் சேர்ந்த 564 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஊத்துக்கோட்டை, தாராட்சி, பேரண்டூர், பேரிட்டிவாக்கம் உட்பட 54 கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. - - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை