49 இடங்களில் மழைநீர் தேக்கம் 134 மரங்கள் வேரோடு சாய்ந்தன
சென்னை:சென்னையில், 554 இடங்களில் தேங்கிய மழைநீர் பெரும்பாலான இடங்களில் அகற்றப்பட்டாலும், 49 இடங்களில் நீர் தேக்கம் காணப்படுகிறது.சென்னை மாநகராட்சியில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் மட்டும், நேற்று முன்தினம், 8.4 செ.மீ., அளவு மழை பெய்தது. நேற்று, 0.4 செ.மீ, அளவில் மழை பெய்தது.இதன் வாயிலாக, 554 இடங்களில் மழைநீர் தேங்கியது. பின், 1,686 மோட்டார்கள் அமைக்கப்பட்டு, மழைநீர் அகற்றும் பணியில், 22,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். நேற்று மாலை வரை, 505 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது. அதேநேரம், 49 இடங்களில் மழைநீர் தேக்கம் காணப்படுகிறது.அதேபோல், புயல் காரணமாக நேற்று முன்தினம் மட்டும், 110 மரங்களும், நேற்று 24 மரங்கள் என, 134 மரங்கள் வோரோடு சாய்ந்தன. அந்த மரங்கள், 489 இயந்திரங்கள் வாயிலாக அகற்றப்பட்டன.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில், இரண்டு நாட்களில், 12 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டது. மேலும், 386 அம்மா உணவகங்களில், 1.07 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. மழையொட்டி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த, 1,016 பேர் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.மழை தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து, 51,480 புகார்கள் பெறப்பட்டு, 39,808 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.