ஆதிஷேச தீர்த்த குளத்தில் மழைநீர் தேங்க நடவடிக்கை
திருவொற்றியூர் திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலின் உள் பகுதியில், பிரம்ம தீர்த்தம் மற்றும் வெளியே 2.4 ஏக்கர் பரப்பளவில், 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேங்கும் அளவில், ஆதிஷேச தீர்த்த குளம் உள்ளன.ஆதிசேஷ தீர்த்த குளத்தில், 2015க்கு முன், பல ஆண்டுகளாக மழைநீர் தேங்காததால், தெப்போத்சவம் நடக்கவில்லை.குளத்திற்கு வரும் மழைநீர் வடிகாலில் அடைப்பால், மழைநீர் தேங்க வேண்டிய சாத்தியக்கூறுகள் இல்லை. காரணம், சுற்றிலும் குடியிருப்புகள் இருப்பதால், போர் போட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.மேலும், நீர் ஆவியாதலால் குளத்தில் மழைநீர் தேங்கினாலும், ஓரிரு மாதங்களில் வற்றி வறண்டு விடுகிறது.அதன்படி, தொடர் அதிகனமழையின் போது கூட பாதி அளவே நிரம்பிய இக்குளத்தில், தெப்போத்சவம் நடந்தாலும், சில மாதங்களில் தண்ணீர் அசுர வேகத்தில் வற்றிவிடும்.கடந்தாண்டு இறுதியில் பெய்த மழையில், குளத்தில் மழைநீர் தேங்கியதால், பிப்., மாதம் தைப்பூசம் தெப்போத்சவம் நடந்தது. ஆனால், சில மாதங்களில் தண்ணீர் வற்றி விட்டது. தற்போது, கிரிக்கெட் விளையாடும் மைதானமாகி விட்டது.எனவே, ஆதிஷேச தீர்த்த குளத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதன்படி, சில ஆண்டுகளுக்கு முன், 26 லட்ச ரூபாய் செலவில், களிமண்ணால் குளத்தின் தரை பகுதியில், தண்ணீர் நிலத்தில் ஈர்க்காத வகையில் லேயர் அமைக்கப்பட்டது. அந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.இது குறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: ஆதிஷேச தீர்த்தக் குளத்தில், மழைநீரை தேக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன்படி, உள் குளத்தில் இருந்து, வெளி குளத்திற்கு தண்ணீரை கடத்த முடியுமா என, முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.குளத்தில் தண்ணீர் தேக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, நீர்வளத்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். அந்த ஆய்வறிக்கை முடிவின் படி, நடவடிக்கை எடுக்கபடும்.தவிர, மெட்ரோ ரயில் துாண்களில் வீணாகும் தண்ணீரை, குளத்திற்கு கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பின், நிச்சயம் அந்த முயற்சியும் நடக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.