உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொதுமக்கள் அடகு வைத்த நகைகளுடன் ராஜஸ்தான் பறந்த கடைக்காரர் சிக்கினார்

பொதுமக்கள் அடகு வைத்த நகைகளுடன் ராஜஸ்தான் பறந்த கடைக்காரர் சிக்கினார்

கோயம்பேடு: பொதுமக்கள் அடகு வைத்த நகைகளுடன் ராஜஸ்தானுக்கு தப்பி, அவற்றை விற்று நண்பர்களுடன் மது அருந்தி ஜாலியாக இருந்த வாலிபர் சிக்கினார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கெகன் ராம், 55. இவர், கோயம்பேடு, சரஸ்வதி நகரில் அடகு கடை நடத்தி வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், கெகன் ராம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் சுனில், 25, கடையை நடத்தி வந்தார். கடந்த மாதம், பல நாட்களாக கடை மூடப்பட்டிருந்ததால் நகையை அடகு வைத்தோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் தங்கியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, வீட்டை காலி செய்து இரவோடு இரவாக ராஜஸ்தானுக்கு சென்றது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மக்கள், இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகாரளித்தனர். இந்த நிலையில், சுனில் சென்னைக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, நேற்று முன்தினம் இரவு வந்த சுனிலை, போலீசார் கைது செய்தனர். இதை அறிந்த பாதிக்கப்பட்ட மக்கள், கோயம்பேடு காவல் நிலையத்தில் குவிந்தனர். போலீசார் அவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். பின், போலீசாரிடம் சுனில் அளித்த வாக்குமூலம்: தந்தை இறந்தபின், அடமானத்தில் இருந்த நகைகளை வேறு கடையில் அடமானம் வைத்து, அந்த பணத்தில் நண்பர்களுடன் மது அருந்தி ஜாலியாக இருந்தேன். சில நகைகளை விற்க ஆரம்பித்தேன். சிலர், வட்டி மற்றும் அசலுடன் நகையை திரும்ப பெற வந்தனர். இதனால் பயந்து, இரவோடு இரவாக வீட்டை காலி செய்து, ராஜஸ்தானுக்கு சென்று விட்டேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !