உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரேலா மருத்துவமனையில் பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க நடமாடும் வாகனம் துவக்கம்

ரேலா மருத்துவமனையில் பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க நடமாடும் வாகனம் துவக்கம்

குரோம்பேட்டை: குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில், பக்கவாதத்திற்கு உடனடி சிகிச்சை வழங்கும் வகையில், நடமாடும் வாகன சேவை துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், அக்., 29ம் தேதி, 'உலக பக்கவாத தினம்' அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில், நடமாடும் வாகன சேவை நேற்று துவங்கப்பட்டது. இந்த சேவையை, திரைப்பட இயக்குநர் ஐஸ்வர்யா, நரம்பியல் மற்றும் நரம்பு அறிவியல் துறையின் தலைவர் சங்கர் பாலகிருஷ்ணன், பெருமூளை ரத்தநாள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் முரளிதரன் வெற்றிவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர். பக்கவாத சிகிச்சைக்கான நடமாடும் வாகன சேவை பிரிவு, மிக விரைவாக நோயாளிகளை சென்றடையும். அங்கேயே நரம்பியல் மதிப்பாய்வு, ரத்த உறைவு பரிசோதனை, நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் ஒருங்கிணைப்பு, நரம்பியல் சிகிச்சை நிபுணர்களோடு தொலைபேசி மூலம் கலந்தாலோசனை மற்றும் மறுவாழ்வுக்கான துவக்க நிலை ஆலோசனை வழங்கப்படும். தேவைப்படுவோர் பக்கவாத சிகிச்சை தொடர்பாக, 044 - 6666 7788 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இது குறித்து, நரம்பியல் மற்றும் நரம்பு அறிவியல் துறையின் தலைவர் சங்கர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியாவில் ஒரு லட்சம் பேரில், 105 - 152- பேருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2021ம் ஆண்டில் மட்டும், இந்தியாவில் 1.25 மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு, புதிதாக பக்கவாத பாதிப்புகள் ஏற்பட்டன. இப்பாதிப்பு, கடந்த 30 ஆண்டுகளில் 51 சதவீதம் உயர்ந்திருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கினால், உயிரிழப்பு மற்றும் நீண்டகால பாதிப்பு திறனிழப்பையும் குறைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ