மெரினா லுாப் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சென்னை, புதிதாக கட்டப்பட்ட மீன் அங்காடியில் கடைகள் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, மெரினா லுாப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அதிரடியாக அகற்றினர்.மெரினா லுாப் சாலையில், 14.93 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக, ஆக., 12ம் தேதி திறந்து வைத்தார். அதன் பிறகு பட்டியலில் உள்ளவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ததற்கான 'டோக்கன்' வழங்கப்பட்டது.இந்நிலையில் நேற்று, லுாப் சாலை முழுதும் உள்ள மீன் கடைகளை, மாநகராட்சி ஊழியர்கள், 'பொக்லைன்' வாகனம் வாயிலாக அகற்றினர். அப்போது, மீனவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் ஆங்காங்கே, அதிகாரிகள் எச்சரிக்கை பதாகைகளையும் அமைத்துள்ளனர்.அதில்,'உயர்நீதிமன்ற உத்தரவின்படி லுாப் சாலையோரத்தில் மீன் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு அனுமதியில்லை. மீறினால் காவல் துறை வாயிலாக தண்டிக்கப்படுவீர்கள்' என, சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. கூரை கீழ் அனல் இருக்காது
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:மெரினா லுாப் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மின் அங்காடியில், வியாபாரம் செய்வதற்கான போதுமான இடவசதி இல்லை. இதனால் மிகவும் குறைந்த அளவு மீன்களையே வாடிக்கையாளர்கள் பார்வைக்கு வைக்க முடிகிறது. 'ஐஸ் பாக்ஸ்' வைக்க கூட இடமில்லை. வாகன நிறுத்தம் பற்றி யோசித்த அதிகாரிகள், வியாபாரம் செய்பவர்களுக்கான இடவசதி செய்து கொடுப்பதில் அக்கறை காட்டி இருக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மீன் அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள கூரையின் கீழ் அதிக அனல் வரும் என, தகவல் பரவியது.இதுகுறித்து செயற்பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'மீன் அங்காடியில் அமைக்கப்பட்டுள்ள கூரையின் கீழ் அனல் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி அனல் ஏற்படும் என்றால், அத்தகைய கூரையை அமைத்திருக்க மாட்டோம்' என்றார்.