ஒக்கியம்மடுவில் நீரோட்டத்திற்கு தடையாக இருந்த மண் அகற்றம்
சென்னை,தென் சென்னை புறநகர் பகுதியில் உள்ள, 62 ஏரிகள், 200க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் கால்வாய், வடிகாலில் இருந்து வெளியேறும் மழைநீர், துரைப்பாக்கம், ஒக்கியம்மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, முட்டுக்காடு கடலில் சேர்கிறது.ஒக்கியம்மடு குறுக்கே, ஓ.எம்.ஆர்., என்ற பழைய மாமல்லபுரம் சாலை குறுக்கே செல்கிறது. தற்போது, ஒக்கியம்மடு, 250 அடி அகலத்தில் உள்ளது.கடந்த ஆண்டு நவ., மாதம், 'மிக்ஜாம்' புயல் மழையில், ஒக்கியம் மடுவில் ஆகாயத்தாமரை சேர்ந்து, நீரோட்டம் தடைபட்டது.இதனால், வேளச்சேரி, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.அதுபோன்ற பாதிப்பு இனிமேல் வராமல் இருக்க, ஒக்கியம்மடு கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மடுவை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.மடுவில் மெட்ரோ ரயில் துாண்கள் அமைகின்றன. இப்பணிக்காக மொத்தம் ஆறு நீர்வழி பாதைகளில் நான்கு இடங்களில் மண் கொட்டப்பட்டது. இதனால், அவ்வப்போது பெய்த மழைநீர் செல்ல வழியின்றி, நீரோட்டம் தடைபட்டது.வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், பணியை வேகமாக முடித்து மண்ணை அகற்றி நீர்வழிப்பாதையை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, ஆறு நீர்வழிப்பாதையில் குவித்து வைத்திருந்த மண்ணை, மெட்ரோ ரயில் நிர்வாகம் அகற்றியது.பருவமழை பெய்தால், பல்வேறு பகுதியில் இருந்து வரும் வெள்ளம் செல்லும் வகையில், மடு அகலமாக உள்ளது என, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.மேலும், ஆகாயத்தாமரை, குப்பை சேர்ந்து அடைப்பு ஏற்படாத வகையில், தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்கள் கூறினர்.