வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தில், தபால் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சிட்கோ நகர் மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய அரசின் தபால் துறை அலுவலகம், வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தின், பெருமாள் கோவில் அருகில் செயல்பட்டது.பல்வேறு நிர்வாக காரணங்களால், வில்லிவாக்கம் சுரங்கப்பாதை அருகில், தாழங்கிணறு பகுதிக்கு மாற்றப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது.இதற்கிடையில், வில்லிவாக்கம், சிட்கோ பிரதான சாலையில், தபால் நிலையத்திற்குச் சொந்தமாக மத்திய அரசின் காலிமனை ஒன்று உள்ளது.இதே பகுதியில் சொந்த இடமிருந்தும், இருபது ஆண்டுகளுக்கு மேல், பல்வேறு இடங்களுக்கு மாற்றம் அடைந்து, வாடகை கட்டடத்திலேயே தபால் நிலையம் செயல்படுவதாக, மக்கள் குற்றம்சாட்டினர்.மேலும் அடுக்குமாடி கட்டடத்தில் இயங்குவதால், மூத்த குடிமக்கள் சென்று வர சிரமப்பட்டனர். குறித்து, நம் நாளிதழில் கடந்த ஆண்டு, செய்தி வெளியாகி இருந்தது. செய்தி எதிரொலியாலும், சிட்கோ நகர் மூத்த குடிமகன்களின் முயற்சியாலும், சிட்கோ நகரில் கடந்த 2023 ஏப்., மாதம் கட்டடம் கட்டும் பணிகள் துவங்கின. தற்போது, பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுகுறித்து, சிட்கோ நகர் மூத்த குடிமக்கள் சங்க தலைவர் முரளி, 67, என்பவர் கூறியதாவது:சிட்கோ நகரில் பிரதான சாலைகள் உட்பட, மொத்தம் 100க்கும் மேற்பட்ட தெருக்களில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். அதிகப்படியாக மூத்த குடிமக்கள் வசிக்கின்றனர். நாங்கள், 20 ஆண்டுகளுக்கும் மேல், சிட்கோ நகரில் தபால் நிலையத்திற்கு சொந்த கட்டடம் வேண்டும் என, முயற்சி செய்தோம்.'தினமலர்' நாளிதழிலும் செய்தி வெளிவந்தது. பலகட்ட முயற்சிக்குப் பின், சிட்கோ நகரில் 1.20 கோடி ரூபாய் செலவில் புதிதாக தபால் நிலையம் கட்டும் பணிகள் நடக்கின்றன. தற்போது, 90 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. சிறிய அளவிலான பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. கடந்த ஓராண்டாக நடக்கும் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்ட வர வேண்டும். இதுதொடர்பாக, தலைமை தபால் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பினோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக, பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.