மீண்டும் மினி பஸ் இயக்க கோரிக்கை
அரும்பாக்கம்,அ.தி.மு.க., ஆட்சியின்போது, சென்னையின் பல்வேறு இடங்களில் சிற்றுந்து இயக்கப்பட்டு வந்தது. மாநகர பேருந்து செல்ல முடியாத இடங்களில் சென்று வந்த சிற்றுந்துகளால், மக்கள் வெகுவாக பயனடைந்தனர்.பின், 2018ல் இருந்து வருவாய் குறைவு உள்ளிட்ட காரணங்களால், பல்வேறு வழித்தடங்களில் சிற்றுந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன.குறிப்பாக, எம்.எம்.டி.ஏ., காலனி, அமைந்தகரை, சூளைமேடு, கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இயக்கப்பட்ட சிற்றுந்துகள் நிறுத்தப்பட்டதால், ஏராளமானோர் சிரமப்படுகின்றனர்.இது குறித்து பயணியர் கூறியதாவது:கோடம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்ளிட்ட பகுதியில், தடம் எண்கள்: 30, 31, 32 சிற்றுந்துகள் இயக்கப்பட்டன.குறிப்பாக, கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேடு பகுதிகளில் வசிப்போர், அண்ணா நகர், அமைந்தகரை, வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, அண்ணா நெடும்பாதை வழியாக, நெல்சன் மாணிக்க சாலைக்கு சென்று மாநகரபேருந்தில் செல்ல வேண்டும்.சிற்றுந்து இயக்கப்பட்டதால் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் பயணியருக்கு வசதியாக இருந்தது. இதற்கிடையில், 2020க்கு பின் கொரோனாவை காரணம் காட்டி சிற்றுந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின் திட்டமே முடங்கியது.பல ஆண்டுகளாக இவ்வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால், 2 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டிய நிலைய உள்ளது. கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்லும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தேவை உள்ள இடங்களை கண்டறிந்து, மீண்டும் சிற்றுந்தை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், கூடுதல் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.