ஆர்.கே.நகர்: தனியார் நிறுவன ஊழியரிடம் செயின் பறித்த நான்கு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் நவீன், 28; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 21ம் தேதி இரவு, வேலை முடித்து, ஆர்.கே.நகர், மணலி சாலையில் உள்ள எடைமேடை அருகே நின்றிருந்த ஆட்டோவில், உடல் சோர்வு காரணமாக சற்று நேரம் அமர்ந்திருந்தார். களைப்பில் சற்று அசந்து விட்டார். திடீரென விழித்து பார்த்தபோது, கழுத்தில் அணிந்திருந்த, 2.5 சவரன் தங்க செயின், சட்டை மேல் பையில் இருந்த இரண்டு மொபைல் போன்கள் மாயமாகி இருந்தன. இது குறித்த புகாரையடுத்து, ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்தனர். இதில், கொடுங்கையூரைச் சேர்ந்த பாலாஜி, 23, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ், 28, ஆகியோர் கூட்டாளிகளுடன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரும், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலை அடுத்து, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தனுஷ், 21, சூர்யகுமார், 25, ஆகியோர், நேற்று காலை கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, 2.5 சவரன் தங்க செயின், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.