டிவிஷன் கிரிக்கெட் லீக் ரிசர்வ் வங்கி அணி வெற்றி
சென்னை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பல்வேறு டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. மூன்றாவது டிவிஷன் 'ஏ' பிரிவு போட்டி, ஸ்ரீபெரும்புதுார் வெங்கடேஸ்வரா கல்லுாரியில் நடந்தது. நுங்கம்பாக்கம் சி.சி., அணி முதலில் பேட்டிங் செய்து 47.4 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்களை அடித்தது. அடுத்து களமிறங்கிய ஐ.சி.எப்., அணி 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு, 205 ரன்கள் அடித்து, வெற்றி பெற்றது. மயிலாப்பூர் விவேகானந்தா கல்லுாரியில் நடந்த போட்டியில், மாம்பலம் மஸ்கிடோஸ் அணி 32.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் அடித்தது. அடுத்த பேட்டிங் செய்த ரைசிங் ஸ்டார் அணி 10.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழந்து 90 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. அதேபோல், குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் நடந்த நான்காவது டிவிஷன் ஆட்டத்தில் ரிசர்வ் வங்கி அணி 39.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 152 ரன்களை அடித்தது. அடுத்து களமிறங்கிய தியாகராயா ஆர்.சி., அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.