குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி புழல், பிரிட்டானியா நகர் மக்கள் தவிப்பு
புழல்:குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி, கடந்த 20 ஆண்டுகளாக புழல், பிரிட்டானியா நகர் மக்கள் தவித்து வருகின்றனர். மாதவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புழல், கதிர்வேடு அருகே பிரிட்டானியா நகர் உள்ளது. வார்டு 31 மற்றும் 32 பகுதியில், 1 முதல் 13 தெருக்கள் உள்ளன. இதில் 1, 2 மற்றும் 3 தெருக்களில் மட்டுமே, கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 11 தெருக்களில் கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய் வசதி செய்யப்படவில்லை. இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நலச்சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த பலனும் இல்லை. இதுகுறித்து மாதவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனத்திடமும் குடியிருப்பு சங்கத்தினர் முறையிட்டனர் அவரும், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்ற வாரிய இயக்குநருக்கு, கடந்த மே 16ம் தேதி கடிதம் அனுப்பினார். ஆனாலும் குடிநீர் வாரியம் பிரிட்டானியா நகரில், குடிநீர் வசதி செய்து தருவதில் அக்கறை காட்டவில்லை. இது குறித்து, பிரிட்டானியா நகர் குடியிருப்பு சங்கத்தினர் கூறியதாவது: கடந்த 2010ல் உருவான எங்கள் நகருக்கு, 2015 முதல் நாங்கள் அடிப்படை வசதி கோரி மனு அளித்து வந்தோம். எங்கள் பகுதியில், ஒவ்வொரு தேர்தலின்போதும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று குழாய் அமைப்பதை வாக்குறுதியாக தரும் அரசியல்வாதிகள், அதன்பின் அதை செயல்படுத்தவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அந்த நகரில் செய்ய வேண்டிய பணிகளுக்கான டெண்டர் எடுப்பதில் தாமதம் உள்ளது. விரைவில் சரிசெய்யப்படும்' என்றார்.