எம்.ஆர்.சி., நகரில் 23 மாடி நட்சத்திர ஹோட்டல்: ரிட்ஸ் கார்ல்டன் கட்டுகிறது
சென்னை: சென்னை எம்.ஆர்.சி., நகரில், 23 மாடிகளுடன் நட்சத்திர ஹோட்டல் வளாகத்தை, 'ரிட்ஸ் கார்ல்டன்' குழுமம் கட்ட திட்டமிட்டுள்ளது. தேவை அதிகரித்து வருவதால், சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை உட்பட பல்வேறு இடங்களில், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகம் கட்டும் நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல்களையும் கட்ட திட்டமிட்டுள்ளன. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், உலக அளவில் நட்சத்திர ஹோட்டல்கள், மால்கள் அமைப்பதில் பிரபல நிறுவனமாக, 'ரிட்ஸ் கார்ல்டன்' நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளது. சென்னையில் ஆடம்பர வசதிகளுடன் நட்சத்திர ஹோட்டல் கட்ட இந்நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. இதற்காக, எம்.ஆர்.சி., நகரில், 16 மாடிகளுடன் அமைந்துள்ள 'லீலா பேலஸ்' ஹோட்டலுக்கு அடுத்து நிலம் வாங்கப்பட்டுள்ளது. இங்கு, 245 அறைகளுடன் நீச்சல் குளம், ஜிம், ஸ்பா, கூட்ட அரங்கு வசதிகளுடன் நட்சத்திர ஹோட்டல் கட்டப்பட உள்ளது. இந்த வளாகம், இரண்டு அடித்தளம், தரைதளம் மற்றும், 23 மாடிகள் கொண்டதாக மொத்தம், 8.50 லட்சம் சதுரடியில் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான திட்ட அனுமதி பெறும் பணிகளில், அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் தெரிவித்தனர்.