சாலைகள் சேதம்: போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினர் கைது
நெற்குன்றம்: நெற்குன்றத்தில், தனியார் இடத்தில் கட்டட கழிவுகள் மற்றும் மண் கொட்ட வரும் லாரிகளால், சாலை சேதமடைந்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் என்.டி., படேல் சாலையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் காலி இடம் உள்ளது. இதில் கட்டட கழிவுகள், குப்பை, கழிவு மண் உள்ளிட்டவை லாரிகள் மூலம் எடுத்து வந்து கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், கனரக வாகன போக்குவரத்தால், சாலைகள் சேதமடைந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வளசரவாக்கம் மண்டலம் 145வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சத்யநாதன், கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்களுடன் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து, பின் விடுவித்தனர். காவல் துறையினர், அடக்கு முறையை கையாள்வதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.