சாலையோர வியாபாரிகள் தேர்தல் வேட்புமனு வழங்கும் பணி துவக்கம்
ஆலந்துார், ஆலந்துார் மண்டத்தில், நகர விற்பனைக் குழுவிற்கான, சாலையோர வியாபாரிகளின் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்பு மனு, நேற்று முதல் வழங்கப்படுகிறது.சென்னை மாநகராட்சியில் அதிக சாலைகள், விற்பனைக்கு அனுமதி, தடை செய்யப்பட்ட பகுதிகள், சாலையோர வியாபாரிகளை ஒரு நகர விற்பனை குழுவினரால் கண்காணிக்க முடியாது என்பதால், ஒவ்வொரு மண்டலத்திலும் நகர விற்பனைக் குழு அமைக்கப்படுகிறது.இக்குழுவிற்கு, வட்டார துணை கமிஷனர் தலைமையில் மண்டல நல அலுவலர், காவல், போக்குவரத்து துறை உதவி கமிஷனர், மண்டல செயற்பொறியாளர், சாலையோரை வியாபாரிகளின் ஆறு பிரதிநிதிகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதி, அரசு சாரா பிரதிநிதி இருவர், நலச்சங்க பிரதிநிதி என, உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.இதில், சாலையோர வியாபாரிகளின் பிரதிநிதி உறுப்பினர்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்று திறனாளர், மகளிர், பொது வகுப்பினர் அடங்குவர். இவர்கள், தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட உறுப்பினர்களின் தேர்தலுக்கு, நேற்று முதல் வேட்பு மனு வழங்கும் பணி துவங்கியது. வரும் 18ம் தேதி வரை வழங்கப்படுகிறது. வேட்புமனுக்கள், 18ம் தேதி பெறப்பட்டு, 19ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது.வேட்புமனு இறுதிப்பட்டியல், 20ம் தேதி வெளியிப்படுகிறது. 26ம் தேதி, அந்தந்த மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, வரும் 27ம் தேதி நடக்கிறது. இதில், 633 சாலையோர வியாபாரிகள், ஒவ்வொருவரும் ஆறு ஓட்டுகளை அளிக்கவுள்ளனர்.