உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மியாட்டில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை பெண் வாயில் இருந்த பெரிய கட்டி அகற்றம்

மியாட்டில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை பெண் வாயில் இருந்த பெரிய கட்டி அகற்றம்

சென்னை,பெண்ணின் வாயில் இருந்த பெரிய கட்டியை, கடுமையான முகச் சிதைவை ஏற்படுத்தாமல், 'டிரான்சோரல் ரோபாட்டிக்' அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றி, மியாட் மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. வேலுாரைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி, 64. இவருக்கு வாயில் மேல் அண்ணத்தில், இரண்டு ஆண்டுகளாக வீக்கம் இருந்தது. வீக்கம் வளர்ந்து கொண்டே வந்ததால், அவரால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டது. குறட்டையாலும் அவரது துாக்கம் தொலைந்தது. வேலுாரில் நடந்த பரிசோதனையில், மிகப் பெரிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. புற்று நோய் கட்டியாக இருக்கலாம் எனவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவும் டாக்டர்கள் பரிந்துரைத்தனர். நண்பர்கள் ஆலோசனைப்படி சாந்தாகுமாரியின் குடும்பத்தினர் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள மியாட் சர்வதேச மருத்துவமனை டாக்டருடன் கலந்தாலோசித்தனர். பின், 'ரோபோட்டிக்' முறையில், அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண நலன் பெற்றார். இதுகுறித்து, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அருண்மித்ரா கூறியதாவது: சாந்தகுமாரியை பரிசோதித்தபோது, 6 செ.மீ., சுற்றளவில், டென்னிஸ் பந்து போல கட்டி இருந்தது. இந்த கட்டி தொடர்ந்து வளர்ந்தால், எதிர்காலத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், உடனே அகற்ற முடிவு செய்தோம். அறுவை சிகிச்சையின்போது, தாடை எலும்பு அறுக்கப்பட வேண்டும். அறுவைச் சிகிச்சையால் கடுமையான முகச்சிதைவு ஏற்படும் என்பது உள்ளிட்ட பல சிக்கல்கள் உள்ளன. இதையடுத்து, 'டிரான்சோரல் ரோபோ' வாயிலாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவானது. இதன்படி, கட்டி இருக்கும் இடத்தில், ஒரு சிறிய கீறல் செய்து, ரோபோட்டிக் அறுவை சிகிச்சையின் உயர் துல்லியத்தைப் பயன்படுத்தி, சுற்றியுள்ள திசுக்களுக்கு சேதம் ஏற்படாமல், கட்டி அகற்றப்பட்டது. இதன் காரணமாக, நோயாளியின் பேச்சு, தசை, முகம், கழுத்து மற்றும் மூளைக்கு வழங்கும் ரத்த நாளங்கள் போன்ற முக்கிய கட்டமைப்பு களைப் பாதுகாத்தது. அகற்றப்பட்ட கட்டி, 'பயாப்சி' பரிசோதனை செய்ததில், புற்றுநோய் பாதிப்பற்றது என்பது தெரிய வந்தது. இவ்வாறு அவர் கூறினார். சிகிச்சை பெற்ற சாந்தகுமாரி இரண்டு ஆண்டுகளுக்கு பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த, மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாசை சந்தித்து நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி