கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்டு மிரட்டிய ரவுடி கைது
எம்.கே.பி.நகர், சென்னை, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய், 20; ரவுடி. இவர், தன் கூட்டாளிகள் தனுஷ், சுரேஷ், சுபாஷ் ஆகியோருடன் சேர்ந்து, அதே பகுதி விமல்ராஜ் என்பவரின் அண்ணனை, 2024, ஏப்., 24ம் தேதி வெட்டினர். குடி போதையில் ஏற்பட்ட வாய் தகராறால், இந்த சம்பவம் நடந்தது.அண்ணனை வெட்டிய சம்பவத்திற்கு பழிவாங்குவதாக கூறி விமல்ராஜ், சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்' வீடியோ வெளியிட்டு, சஞ்சய்க்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதற்கிடையே, விமல்ராஜை வெட்டிய வழக்கில், அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். அண்மையில், அனைவரும் ஜாமினில் வந்தனர். இந்நிலையில் சஞ்சய் இந்த வீடியோக்களை பார்த்துள்ளார். இதையடுத்து, அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், விமல்ராஜை திட்டி கத்தியுடன் சஞ்சய் மிரட்டல் விடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது.இதுகுறித்த புகாரின்படி, புளியந்தோப்பு துணை ஆணையரின் தனிப்படையினர், சஞ்சயை அவரது வீட்டில் நேற்று பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.இதையடுத்து, பொதுமக்களை பயமுறுத்தும் வகையில், கத்தியால் மிரட்டல் விடுத்து, 'ரீல்ஸ்' வெளியிட்டு வந்த சஞ்சயை, கைது செய்தனர்.சஞ்சயை மிரட்டி, வீடியோ வெளியிட்ட விமல்ராஜை, 2024, டிசம்பரில், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.