உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டி.பி., சத்திரத்தில் ரவுடி வெட்டி கொலை

டி.பி., சத்திரத்தில் ரவுடி வெட்டி கொலை

சென்னை: டி.பி., சத்திரத்தில், ரவுடியை ஓட ஓட விரட்டிச் சென்ற, மர்மக் கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது. வடசென்னை டி.பி.,சத்திரம் ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 37. பழைய குற்றவாளியான அவர், பந்தல் போடும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம், 1:15 மணியளவில் ஜோதி அம்மாள் நகர், மூன்றாவது தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர், அவரை வழிமறித்தனர். அரிவாளை எடுத்து வெட்ட முயன்றனர். தப்பி ஓடிய ராஜ்குமார், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சமையல் அறையில் மறைந்து கொண்டார். அவரை விரட்டிச் சென்று, தேடி பிடித்த மர்ம நபர்கள், அவரை வெட்டி விட்டு தப்பினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜ்குமாரை, அவரது உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, டி.பி.,சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜ்குமாருக்கும், ரவுடியான வெள்ளை சுதாகர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. தற்போது, வெள்ளை சுதாகர் சிறையில் இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர், 200 நாளாக இல்லை

டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில், 200 நாட்களாக சட்டம் - ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரே கூடுதலாக கவனித்து வருகிறார். இதன் காரணமாகவே குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ