ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டிய ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்ட ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வியாசர்பாடி எஸ்.எம்., நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 52; பிரபல ரவுடி. கடந்த 1997 நவ., 8ல், வியாசர்பாடியில் நடந்த கூட்டம் ஒன்றில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஸ்டான்லி சண்முகம் என்பவர், தரக்குறைவாக பேசினார். அதனால், வீட்டின் முன் உட்கார்ந்திருந்த ஸ்டான்லி சண்முகத்தை, கூட்டாளிகளுடன் சென்று நாகேந்திரன் கொலை செய்தார். இதுதான், நாகேந்திரன் செய்த முதல் கொலை. அடுத்தடுத்து அவர் மீது, ஐந்து கொலை வழக்குகள் பாய்ந்தன. இந்நிலையில், ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கில், 1999ம் ஆண்டில், சென்னை ஐந்தாவது கூடுதல் அமர்ந்து நீதிமன்றம், நாகேந்திரனுக்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், 2003ல் தண்டனையை உயர்த்தி, ஆயுள் முழுதும் சிறையில் கழிக்க வேண்டும் என, தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புழல், கடலுார் என, வெவ்வேறு சிறைகளில் நாகேந்திரன் அடைக்கப்பட்டார். தற்போது, வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 2024, ஜூலை 5ல், சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நடத்திய விசாரணையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய, சிறையில் இருந்தபடியே 'ஸ்கெட்ச்' போட்டு கொடுத்து, அக்கொலைக்கு மூளையாக நாகேந்திரன் செயல்பட்டதை கண்டறிந்தனர். இந்த வழக்கில், நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கல்லீரல் பிரச்னை காரணமாக, சென்னை மற்றும் வேலுாரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில், நாகேந்திரன் சிகிச்சை பெற்று வந்தார். உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவனையில், ஆக., 15ல் சேர்க்கப்பட்டார். அங்கு சுயநினைவை இழந்தார். இதனால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கைதிகளுக்கான வார்டில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார். இவர் மீது, ஐந்து கொலைகள், 12 கொலை முயற்சி என, 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில், 19 வழக்குளைகில் விடுதலை செய்யப்பட்டார். நான்கு வழக்கில் தண்டனையும், மூன்று வழக்குகள் விசாரணையிலும் உள்ளன. நாகேந்திரனுக்கு உஷா, விசாலாட்சி என, இரண்டு மனைவியர். மூத்த மகன் அஸ்வத்தாமன், காங்கிரஸ் நிர்வாகியாக இருந்தார். இளைய மகன் அஜீத்ராஜ், பா.ஜ., நிர்வாகியாக உள்ளார். மகள் ஷாலினி, பல் டாக்டராக உள்ளார். ***