ராயபுரம்: ராயபுரத்தில் 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம், ஆறு மாதங்களாக பயன்பாட்டிற்கு வராததால், இரவு வேளையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. வடசென்னையின் அடையாளமாக திகழும் பழமையான பிராட்வே பேருந்து நிலையம், முறையான பராமரிப்பின்றியும் அடிப்படை வசதிகளின்றியும் உள்ளது. பொது போக்குவரத்து வசதி மற்றும் வருங்காலத்தை கருத்தில் வைத்து, பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்த, அதே இடத்தில், 823 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த மையமாக அமைக்க அரசு திட்டமிட்டது. பணிகள் துவங்கும் முன், பயணியருக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, பேருந்துகளை ராயபுரத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டு, ராயபுரம் இப்ராஹிம் சாலையில், துறைமுகத்துக்கு சொந்தமான, 3 ஏக்கர் இடத்தில், 7 கோடி ரூபாய் செலவில், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பணிகளை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டது. பணிகள் முடிந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில், பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆறு மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பிராட்வேயில் இருந்து கடற்கரை வழியாக ராயபுரம் செல்லும் சாலையில், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ராயபுரம் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் இடத்தை ஒட்டியே தற்காலிக பேருந்து நிலையத்தின் நுழைவாயில் இருப்பதால், நெரிசல் அதிகரிப்பது மட்டுமின்றி விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சரியான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டதே, பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. தற்போது, இங்கு பகுதி சிறுவர்கள் முதல் பெரியோர் வரை மைதானமாகவும், 'பார்க்கிங்' பகுதியாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரம் இரவில், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துஉள்ளது.