உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி

சாலை ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி

திருவேற்காடு, சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரை மிரட்டி, 10 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர், 43; சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர். இவர், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை, 200 ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக நண்பரை அணுகியுள்ளார். அவர்கள் மூலம், திருவேற்காடு, அயனம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 25, ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 48, ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் 'கமிஷன்' அடிப்படையில் பணத்தை மாற்றி தருவதாக கூறியுள்ளனர். இதற்காக, சுதாகர், தன் நண்பர்கள் கிஷோர், சந்திரசேகரை அழைத்து கொண்டு, காரில் 10 லட்சம் ரூபாயுடன் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் காரை மறித்து, கத்தி முனையில் 10 லட்சம் ரூபாயை பறித்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து திருவேற்காடு போலீசில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, மணிகண்டன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், வழிப்பறியில் ஈடுபட்டது யார், பணத்தை வங்கியில் கொடுத்து மாற்றாமல் ஏன் தனி நபரிடம் கொடுத்து மாற்ற வேண்டும் என்கிற கோணங்களிலும் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ