மின்சார பேருந்துகளிலும் ரூ.1,000 பாஸ் பயன்படுத்தலாம்
சென்னை, 'சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில், 1,000 ரூபாய் பாஸ் பயன்படுத்தலாம்' என, மாநகர போக்குவரத்து கழகமான, எம்.டி.சி., தெரிவித்துள்ளது.எம்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதால், அதை சுற்றியுள்ள 11 வழித்தடங்களில் மட்டுமே முதற்கட்டமாக சேவை வழங்கப்படுகிறது. பெரும்பாக்கம் பணிமனை திறக்கப்பட்டதும், பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளுக்கு, மின்சார பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும். தற்போது தயாராகி வரும் ஒன்பது பணிமனைகள் திறக்கப்பட்டவுடன், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மின்சார பேருந்து இயக்கப்படும்.மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் கட்டணமே வசூலிக்கப்படும். சிங்கார சென்னை பயண அட்டை, 1,000 ரூபாய் பாஸ் ஆகியவற்றை, மின்சார பஸ்களிலும் பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.