சென்னை மாநகராட்சியில் ரூ.2,131 கோடி வரி வசூல்
சென்னை, சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டில் இதுவரை, 2,131 கோடி ரூபாய் வரி வசூல் கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டு வசூலை விட, 378.73 கோடி ரூபாய் அதிகம்.சென்னை மாநகராட்சி வரி வருவாயில், சொத்துவரி, தொழில் வரி பிரதானம். அத்துடன், நிறுவன வரி, பொழுதுபோக்கு வரி, வர்த்தக உரிமம், கடை வாடகை, விளம்பர பதாகை ஆகியவற்றின் வாயிலாக, மாநகராட்சிக்கு ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.இந்த நிதியாண்டு முடிய, இன்னும் ஒன்றரை மாதமே உள்ளதால், வரி வசூலிப்பில், மாநகராட்சி தீவிர கவனம் செலுத்தி வருகிறது.சொத்துவரி செலுத்தாத, 2 லட்சம் பேருக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் வகையில், 'க்யூஆர் கோடு' உடன் கூடிய, நோட்டீஸ் வழங்கப்பட்டு சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாதவர்களின் பட்டியலையும், https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் வெளியிட்டு, வரி வசூலிப்பை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.மாநகராட்சியின் தொடர் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரை சொத்து வரி 1,708 கோடி ரூபாய்; தொழில்வரி 315 கோடி ரூபாய் என, 2,131.11 கோடி ரூபாயை மாநகராட்சி வசூலித்து உள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் வசூலான, 1,752.38 கோடி ரூபாயைவிட, 378.73 கோடி ரூபாய் அதிகம். இன்னும் ஒன்றரை மாதங்கள் இருப்பதால், மொத்த வரி வருவாய், 2,500 கோடி ரூபாய் என்ற இலக்கை தாண்டிவிடும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்கள், தங்களது தொலைபேசி எண்களை, மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.இதன் வாயிலாக, தங்களது சொத்து வரி சம்பந்தமான விபரங்களை எளிதாக பெற இயலும்.