ரூ.25 லட்சம் மோசடி பள்ளி ஆசிரியை கைது
சென்னை:சென்னை, பெரம்பூரைச் சேர்ந்தவர் சிவசங்கரி, 45. இவர், அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர், சென்னையைச் சேர்ந்த ஏழுமலை என்பவரிடம், 'சி.எஸ்.ஐ., எனும் கிறிஸ்துவ தென்னிந்திய திருச்சபையின் கீழ் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில், ஆசிரியர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.உங்கள் உறவினர்களுக்கு ஆசிரியர் பணிக்கு 7 லட்சம் ரூபாய், அலுவலக உதவியாளர் பணிக்கு, 2.50 லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கித் தருகிறேன்' எனக்கூறி, 25 லட்சம் ரூபாய் வாங்கி, போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்துள்ளார்.இது குறித்து ஏழுமலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, சிவசங்கரியை நேற்று கைது செய்தனர்.இவர், மேலும் ஆறு பேரிடம் 26 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.